
Tamil quotes, Tamil recipes, Tamil celebrity quotes, Tamil Inspirational quotes, Tamil Motivational quotes
bharathidasan padalgal in tamil, bharathidasan padalgal pdf, bharathidasan tamil kavithaigal, bharathidasan padalgal tamil, bharathidasan kavithaigal with meaning in tamil, bharathidasan in tamil kavithaigal, bharathidasan kavithaigal books, bharathidasan kavithaigal in tamil pdf download, bharathidasan tamil kavithaigal, bharathidasan in tamil kavithaigal
தெருவில் குறத்தி :
ஐயே! ஐயே …!
தெற்குப் பொதிகைமலை எங்கள் மலைதான் — நல்ல
தென்பாங்கும் நாட்டியமும் எங்கள் கலைதான்
தக்கதக்க தக்கதக்க என்றாடுவோம் — நல்ல
தாயான தமிழையே கொண்டாடுவோம்!
ஐயே! ஐயே …!
சாதி சனங்கள் என்னை இட்டு வந்தாங்க — தன்னந்
தனியே என்னை இங்கே விட்டுப் போனாங்க!
வீதியிலே ஆடிப்பாட நானோ ஒருத்தி — ஐயோ
வெட்கமா இருக்குதுநான் சின்னக் குறத்தி!
ஐயே! ஐயே …!
(வீதியில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்டுப்புறத்தான் எதிரில் நெருங்கிக் கூறுகின்றான்.)
நாட்டான் :
வெட்கமென்ன சிக்கிஎன்ன சொல்லடி பெண்ணே — இந்த
வீதியிலே யாருமில்லை நில்லடி கண்ணே!
சொக்குப்பொடி தூவிவிட்டால் என்மேலே
சோலைக்குநீ வாடிஇள மயில்போலே
குறப்பெண்ணே …!
குறத்தி :
என்னை வளைக்க இவன் வலை போட்டான் — நல்ல
இன்பம் பரிமாற இலைபோட்டான்;
மின்னல் அடித்ததுபோல் கண்ணை அடித்தாள் — காதல்
வேதனையி னாலேமனம் துடிதுடித்தாள்
ஐயே! ஐயே …!
தீ நாட்டுப் புறத்தான் — நான்
காட்டுக் குறத்தி!
நாட்டான் :
நாட்டு மக்களில் — வேறு
பாட்டைக் கண்டாயோ?
குறத்தி :
நாம் — கூட்டுவாழ்க்கை வாழுவது
கைகூடுமோ — இந்த
கோதைக்குநீ மாலையிட
எண்ணிடலாமோ?
ஐயே! ஐயே …!
நாட்டான் :
காதல் கொண்டபின் — நம்மில்
சாதி ஏதடி?
குறத்தி :
வேதனை தரும் — இந்தச்
சோதனை ஏனோ?
நாட்டான் :
மாதரசி உனக்கென்மேல் ஆசையில்லையா? உனை
வைத்துப் படைக்க எனக்கு மீசையில்லையா?
குறப்பெண்ணே …
குறத்தி :
உனக்கு,
ஆடத் தெரிந்தாலும் போதுமே — கொஞ்சம்
பாடத் தெரிந்தாலும் போதுமே — ! — மிக
அரிதாகிய கனல் ஒன்றுமே
தொரியாத ஓர் பழிகாரனை
நாடுவதால் என்ன புண்ணியம் — உளம்
நத்துவதால் என்ன கண்ணியம்?
நாட்டான் :
ஆட்டத்தி லேஒரு சேரன்நான் — நல்ல
பாட்டில் சோழ பாண்டியர்பேரன் நான் — நீ
அச்சப் படுவதை விடுவாய்
ஆசைக் கனிஇதழ் தருவாய் — நம்மைக்
கூட்டியதும் கலை தானடி — நல்ல
கோடையிலே குளிர் தேனடி!
குறத்தி :
எடுஎடு எடுஎடு ஒரு புறப்புறை தங்கமாமா!
தடதட தடதட வென முழங்குவோய் தங்கமாமா!
நாட்டான் :
கொடு கொடு கட்டிமுத்தம் புள்ளிமானே — நான்
கொள்ளக் கொள்ள இன்பமடி புள்ளிமானே
குறத்தி :
விட ஒருநொடி முடியாது தங்கமாமா — உனை
விட்டாலுயிர் தரியாது தங்கமாமா!
நாட்டான் :
தடதடவெனப் பாயுதடி இன்பவெள்ளம்
தடங்களில் துள்ளுதடி நம்முள்ளம் !
சிரிப்பைக் கொண்டு செய்த உதடு
சிரித்துக் கொண்டே இருந்தது — பாங்கனே!
சிரித்துக் கொண்டே இருந்தது ;
ஒரு திங்களாய் உன் முகம் காணேன் என்றாள் — நான்
ஒன்றுமே சொல்லாமல் ஊமைபோல் நின்றேன்
உருவப் படம்கேட்டேன் தரவில்லை என்றாள்;
ஓகோ நானதை மறந்தேனே என்றேன் ;
அரிவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும்
சிரிப்பைக் கொண்டு செய்த உதடு
சிரித்துக் கொண்டே இருந்தது — பாங்கனே!
சிரித்துக் கொண்டே இருந்தது!
உனைக்காணா திரவில் தூங்கிடேன் என்றாள் — உனை
ஒருநொடி யேனும் பிரிந்திடேன் என்றாள்;
எனக்குப் பிறநாட்டில் வேலையுண் டென்றேன்
இரண்டு திங்களில் வரேனென்று சொன்னேன்;
புனைபாவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும்
சிரிப்பைக் கொண்டு செய்த உதடு
சிரித்துக் கொண்டே இருந்தது — பாங்கனே!
சிரித்துக் கொண்டே இருந்தது!
இருப்பதாய் இருந்தால் என்னிடம் சொல்க — நீ
போவதாய் இருந்தால்என் கட்டைக்குச் சொல்என்றாள்;
வருத்தத்தால் ஒன்றுமே சொல்லவில் லைநான்
வாழ்வென்னைக் கைவிடு மோஎன் றெண்ணினேன்
திருப்பாவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும்
சிரிப்பைக் கொண்டு செய்த உதடு
சிரித்துக் கொண்டே இருந்தது — பாங்கனே!
சிரித்துக் கொண்டே இருந்தது!
ஓர் நிலவே அவள்தானோ கதிர் தானோ
கொம்புத் தேனோ — நடை
ஓவியமோ புள்ளி மானோ — வேண்டும்
நேயத்திலே நெஞ்சம் தோயும்போதிற் — புதிதாய்
நேரிட்ட இன்பத்தேன் ஊற்றோ — வந்து
நெஞ்சைத் தொடும்குளிர் காற்றோ? (ஓர்)
மாணிக்கம் சிரிப்புக் காரியோ — நெஞ்சை
மகிழ்விக்கும் வானம் பாடியோ ?
ஆணிப் பொன்னே அவள் மேனியோ ? — பொழி
அனைத்தும் தித்திக்கும் சீனியோ? (ஓர்)
ஆடும் மயிலோ பாடும் குயிலோ … படம்விரித்
தாடும் மயிலோ பாடும் குயிலோ? (ஓர்)
நாடும் அகப் பொருளி னுக்கே — அவள்
நல்லதோர் இலக்கியமோ ?
தேடரிய கலைப் பொருளோ ? — அருமைச்
செந்தமிழின் இன் சுவையோ? (ஓர்)
ஆடட்டுமா? — கொஞ்சம்
பாடட்டுமா? அத்தான் … (ஆ)
உயிர் தளிர்க்கப் பாடும் பாவலனே — என்
உளங் களிக்கப் பேசும் நாவலனே !
மயலுக்கு மருந்தொன்று தேடிவந்தேன் — உன்
மலராத முகங்கண்டு மனம் நலிந்தேன் ! (ஆ)
வெண்பாத்தேன் சொரியும் ஒருநேரம் — பின்
விருத்த மழைபொழியும் (உன்) இதழோரம்
கண்பார்த்துன் பொன்னான வாய்திறந்தால் — நல்ல
கட்டாணி முத்துக்கள் சிந்திவிடுமோ? (ஆ)
மறவன் உருவியஓர் வாள்போலே — ஒளி
வாரி வழங்கும்உன் கண்ணாலே !
நிறையஎன் மனம்பட்ட புண்ணாலே — உன்
நினைவு கலங்குவதும் எதனாலே? (ஆ)
சோலையுள் வானமும் நீலக்கடலும் — பசுந்
தோகை மயிலும்ஒரு கொஞ்சுகிளியும்
காலப் புதுமையும்உன் உள்ளத்திலே — கவி
காட்டினவா தமிழ் வெள்ளத்திலே! (ஆ)
பாருக்கோர் புதுமை
மாதர்க் கரசியவள்
பார்க்கும் பார்வை தன்னிலே — வந்து
பாயும் காதல் மின்னலே!
அவள் வார்த்தை ஒவ்வொன்றுமே
நேர்த்தி மட்டுமல்ல!
நறுக்கிப் பிழிந்தநற் கன்னலே!
நேருக்கு நேரிரண்டு
கெண்டை கண்டேன் நெற்றி
நீராழி மண்டபத்தில் — அதற்
கப்புறம் ஓர்புறத்தில் — கடும்
போருக்குப் பாரை
அழைக்க வளைத்தஇரு
புருவங்கண்டேன் திறத்தில்!
பவழமோ கோவைப்
பழமோ மின்னல் பிழம்போ
பாவை இரண்டுதடுமே ! — உண்டால்
சாவையும் நீக்கி விடுமே! — அங்கே
தவழும் ஒளிச்சிரிப்பைத்
தான் கண்டால் என்னுள்ளம்
பேரின் பத்தைத் தொடுமே!
நுண் இடையும் அன்னம்போன்ற
நடையும் நிறைமடை
உடையும் அழகின் பெருக்கா? — இவை
கடையில் விற்கும் சரக்கா? — மேல்
உடைஎன்று மின்னுடுத்தி
உலவிடும் தங்கத்தேர்
எனக்கல்லாமல் பிறர்க்கா? (போருக்)
முல்லை கமழும் தென்றல்
மொய்க்கும் வண்டின் பாடல்!
எல்லையற்ற இன்பம்! — நெஞ்சே
ஏனோ இன்னும் துன்பம்?
சொல்லி வைத்த தைப்போல்
சொல்லிக் கொஞ்சும் கிள்ளை,
எல்லை யற்ற இன்பம் — நெஞ்சே
ஏனோ இன்னும் துன்பம்
எங்குப் போக வேண்டும்?
யாரை அடைய வேண்டும்?
இங்கு மெத்த இன்பம் — நெஞ்சே
ஏனோ இன்னும் துன்பம்?
பிறக்க முடியாதடி
உனைப்போல் ஒருத்தி
பெண்ணழகால்இந்த
மண்ணரசாள இனிப்
பிறக்க முடியாதடி
உன்னைப்போல் ஒருத்தி
மறக்கவும் முடியாது
கண்ணே உன் முகத்தையும்
வாரி ஒளிவீசும்
நகைமுத்துச் சரத்தையும்!
இறக்கவும் முடியாதே
உனை இழந்தே னென்றே
இருக்கவும் முடியாதே
உனைப் பிரிந்தேனென்றே
பிறக்க முடியாதடி
உனைப் போல் ஒருத்தி!
பறக்கவும் முடியாது
நீ எனை விட்டே;
பச்சைமயி லேவாஎன்
வாழ்வின்பொ ருட்டே ;
திறக்கவேண்டும் உன்வாய்
என்நலம் கோரி
தென்னாடு பெற்றஎன்
கிளிப்பேச்சுக் காரி
பிறக்க முடியாதடி
உனைப்போல் ஒருத்தி!
வாழுமாந்தர்க்கு வான்மழை போன்றது
மணாளர்வந் தெனக்குத் தருவதோர் இன்பம்
தோழியே அவரின்றி நான்படும் தொல்லை
சொல்லிக் காட்டல் இலேசிலே இல்லை
சிறுகொம்பு பெரும்பழம்
தாங்குவது போலே என்
சிறிய உயிர் பெருங்காதல்
தாங்குவ தாலே
மறத்தமிழன் விரைவில்
வராவிடில் உடலில்
மளுக்கென்று முறியும் என்
ஆவிமண் மேலே
பிறர்செய்த தீமையை
மறந்திடுதல் மறதி
“இறந்துபோ வாளே
யான்போக வேண்டுமே”
என்பதில் மறதியா
அது என்றன் இறுதி!
அவன்:
மந்தைமாடு வீடுவரும் மாலை நேரத்தில்
வந்துநின்ற தென்னேடி சாலை ஓரத்தில்?
அவள்:
சந்தையிலே கூடுவாங்கப் போனதி னாலே
தயங்குகின்றேன் சாயுந்திரம் ஆனதி னாலே
அவன்:
சந்தையிலே கூடுவிற்க வில்லையா கண்ணே?
தக்கதாக இல்லைஎன்ற தொல்லையா பெண்ணே?
அவள்:
சந்தையிலே கூடுவிற்க வில்லை நல்ஐயா
தனித்துவந்தேன் என்னபண்ண நீயே சொல்லையா?
அவன்:
கூடுநல்ல கூடுகோழிக் கூடுவேண்டுமா?
அவள்:
கூடுநல்ல கூடுகோழிக் கூடு வேண்டுந்தான்
அவன்:
பாடு பெண்ணே பாடுநல்ல கூடுதருவேன் ;
அவள்:
ஆடு கொஞ்சம் ஆடுநானும் பாடி வருவேன்
அவன்:
கூடு, கோழி கூடுவதுபோலக் கூடுவோம்.
அவள்:
கூடு, சிட்டுக் கூடுவது போலக் கூடுவோம்.
அவன்:
கூடு கூடு கொஞ்சுமொழி சொல்லிச் சொல்லியே
அவள்:
கூடக்கூட நெஞ்சில் ஆசை தீரவில்லையே!
தலைவன் :
காதல் வாழ்வே வாழ்வென்று வள்ளுவர்
கருதிய தேன்? புகல்வாய்!
தலைவி :
மாதரும் துணைவரும் மனமொத்ததே இன்பம்
மற்றுமோர் இன்பமுண்டோ?
தலைவன் :
காதலி இடத்தில் காதலன் காட்டும்
கடமைதான் யாதுரைப்பாய்?
தலைவி :
காதலி நலமே தன்னல மென்று
கருதியே வாழ்ந்திடுவான்!
தலைவன் :
மாதர்கள் எல்லாம் மணவாள ரிடத்தில்
வாழும் முறைமை உரைப்பாய்?
தலைவி :
ஆதிமந்தி பிறந்த அருந்தமிழ் நாட்டில்
அவள் அவனைப் பிரிதல் இல்லை!
உனக்கென்று நான்பிறந்தேன்
உண்மையிலே பெண்மயிலே!
எனக்கென்று நீபிறந்தாய்
என்குயிலே பொன்வெயிலே!
தனக்கென்று வாழ்வதில்லை தமிழினத்தான் உலகினிற்றான்
மனமொன்று பட்டால்இன்ப வாழ்க்கையிலே நாம்ஒன்றுதான்
(உனக்)
நான்என்னை உனக்களித்தேன்
நடையழகி இடையழகி
நீஉன்னை எனக்களிப்பாய்
நேயப்பெண்ணே! வாஎன் கண்ணே!
வான்ஒன்று நிலவொன்று இணைந்ததனால் அழகுண்டு ;
நானொன்று நீஒன்று நணுகுவதால் வாழ்வுண்டு .
(உனக்)
தேனுனக்கு நான் துணைவன்
தீங்கரும்பே! கோங்கரும்பே!
கோன்எனக்கு நீதுணைவி
கொஞ்சும்கிளி! வஞ்சிக்கொடி!
ஏனுனக்கு மனக்கசப்புநீ எனக் கதைவிளக்கு
நானுனக்கும் நீஎனக்கும் நாமளித்த அன்பளிப்பு!
(உனக்)
எடுப்பு
பெண்ணென்றால் அவளல்லவோ பெண்? — உலகில் (பெண்)
உடனெடுப்பு
கண்ணவள் மாமியார்க்கே காப்பவள் மாமனார்க்கே
உண்மையில் வாழ்க்கையிலே உயிராவாள் கணவனுக்கே (பெண்)
அடிகள்
பொன்னான குணமுடையாள் பொய்யில்லா மணமுடையாள்
முன்னான அறமுடையாள் முத்தான சொல்லுடையாள்
தென்னாட்டின் பண்பாட்டில் தீராத பற்றுடையாள்
தன்வீட்டு விருந்தினர்மேல் தாய்போன்ற அன்புடையாள் (பெண்)
மாண்புடைய தமிழ்நெறிக்கு மாத்தமிழர் புகழ்ஒளிக்குக்
கோணல்வந்தால் ஒருதுளிக்கு நாணம்வரும்அந் தக்கிளிக்கு
காணநல்ல நகைவேண்டாம் கற்பொன்றே அவள்பூண்டாள்
ஆணழகன் வீட்டினுக்கே அறம்வளர்க்கும் திருவிளக்கே! (பெண்)
காலையிலே தான்எழுவாள் கன்னித்தமி ழைத்தொழுவாள்
வேலைஎதிலும் வழுவாள் வீணர்நிலைக் கேஅழுவாள்
ஏலாத சாதிமுறை எள்ளளவும் அவள் தழுவாள்
ஞாலத்து வள்ளுவனார் நன்னெறிவிட்டே நழுவாள் . (பெண்)
பெண்டிர்க்குப் பெருமாட்டி பிள்ளைகட்கு வழிகாட்டி
அண்டிடும் ஏழைகளை ஆதரிப்பாள் அமுதூட்டி!
வண்டமிழ்த் தாயான வையத்து மூதாட்டி
தொண்டுக்கே அன்புகாட்டித் தொழுவாள் மணமலர் சூட்டி! (பெண்)
திரும்பிப் பார்த்தால் என்ன?
விரும்பிப் பார்த்த என்னை அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
பெரியவேலை உள்ளவன்போலே
பெண்ணை வெறுத்தவன் போலே
அரும்பும் சிரிப்பை அடக்கிச் சென்றான்
அசையும் தேரைப்போலே — அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
குன்று சார்ந்த நாடும் வீடும்
கொடுவென்று கேட்டேனா — நான்
சென்று வழியை மறித்துச் சிரித்து
மடியில் கைபோட்டேனா — அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
மானென்றும்ஒரு மயிலென்றும்எனை
அழைக்கச் சொன்ன துண்டா? — எனை
ஏன்என் றொருசொல் சொன்னால் உள்ளம்
ஒடிந்திடுமோ துண்டா? — அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
சதையில் மெருகும் முகத்தில் அழகும்
தாங்கிச் சென்றான் கொடியன் — நான்
அதிலே கொஞ்சம் இதிலே கொஞ்சம்
அள்ளிக் கொள்ளவா முடியும் — அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
பாதி மறைத்துப் பாதி விலக்கும்
படத்து நடிகையாநான்?
காதல் கொண்டஎன்முகத்தைப் பார்க்கக்
கண்ணும் கூசுவதேனோ? — அவன்
திரும்பிப் பார்த்தால் என்ன?
கண்ணைப் போட்டான் என்மேலே;
கையைப் போட்டான் தோள்மேலே;
மண்ணை அள்ளிப் போட்டாண்டி
என் வாழ்விலே! — ஒரு
பெண்ணைக் குழியில் போட்டாண்டி
இந்நாளிலே!
காலைப் போட்டான் என்வீட்டில்,
கதையைப் போட்டான் என்காதில்,
வேலைத் தூக்கிப் போட்டாண்டி
என் நெஞ்சிலே! — என்
தோலை நெருப்பில் போட்டாண்டி
இந்நாளிலே!
பல்லைப் போட்டான் என்உதட்டில்
படியைப் போட்டான் முத்த் அளக்க
கல்லை வாரிப் போட்டாண்டி
என் தலைமேலே! — சொன்ன
சொல்லை மறந்து போனாண்டி
இந்நாளிலே!
பூவைப் போட்டான் என்தலைமேல்
பொடியைப் போட்டான் நான்மயங்க
சாவைத் தூக்கிப் போட்டாண்டி
என் வாழ்விலே! — இந்தப்
பாவையைத்தான் மறந்தாண்டி
இந்நாளிலே!
புதுநிலவு போல்முகத்தாள் நின்றாள் வெளியில்
மிதிவண்டி மேல்விரைந்து சென்றான் — மதிவாணன்
பார்த்தான் அவள்பார்த்தாள் பாய்காதல் மின்தாக்கி
வேர்த்தாள் அவன்வேர்த்தான் நெஞ்சு!
மறுநாளின் மாலை மதிவாணன் வந்தான்
பிறைநூதலா ளும்காணப் பெற்றாள் — சிறுக
விரித்தான் விரித்தாள் இதழ்க்கூட்டு மின்னச்
சிரித்தாள் சிரித்தான்அச் சேய்!
மூன்றாநாள் முத்துநகை நின்றிருந்தாள் முன்போல
தோன்றாத் துணையானான் தோன்றினான் — ஈன்றாரை
மீறென்றான் மீறினாள்! மின்னே மிதிவண்டி
ஏறென்றான் எறினாள் பெண்.
பெற்றோர் இதுகேட்டார் சற்றும் பிடிக்கவில்லை
அற்றனவே சாதிமதம் ஆ!என்றே — சுற்றமுடன்
கட்டைவண்டி ஏறிக் கதறி மிதிவண்டி
தொட்டவழிச் சென்றார் தொடர்ந்து!
சாதிமதக் கட்டைவண்டி தன்னிலே செல்லுகையில்
கோதையும் சேயும் குளத்தூர்போய் — ஓதியே
அன்புற்றார் வாழ்ந்த அறிவு மணமுடித்தே
இன்புற்றிருந்தார்கள் நன்கு.
விட்டுவிட்டுக் குழல் ஊதும்
மெட்டு வைத்துக் குயில் பாடும்
வட்டாரச் சோலையிலே
மாமயில் ஆடும் — நல்ல
மரங்கொத்தி அரங்கத்தில்
தாளங்கள் போடும்.
கட்டுக்கரை அலை மோதும்
காதினிக்கும் ஒரு மேளம்
தட்டாமல் ஒத்தூதும்
தாமரை வண்டு — நல்ல
சிட்டுச் சலங்கை போடும்
ஒத்தாசை கண்டு.
வெள்ளைப் பட்டுப் பெடைஅன்னம்
வீறாப்பு நடை அன்னம்
உள்ளோடு லாவையிலே
ஒட்டாரக் கிள்ளை — நல்ல
ஒழுங்குபேசிக் கொண்டிருக்கும்
ஒயாத பிள்ளை.
கொள்ளை கொள்ளை கொடிமுல்லை
கோத்தமுத்தும் இணை இல்லை
கள்ளொழுகும் உதடு காட்டிச்
சிரித்தாள் ஒருத்தி — அவள்
காட்சியெல்லாம் கண்டிருந்தது
ஓர்செம்பருத்தி
மனத்தினை அவளுக்கு ஈந்தான்
மங்கையும் தன்னைத் தந்தாள்
நடந்தது நாள் ஒவ்வொன்றாய்
நகர்ந்தன நான்கு திங்கள்?
மடமயில் தனைநெ ருங்கும்
வாய்ப்பில்லை. பேச்சும் இல்லை
அடைந்தேன்இன் றவள்வ ரைந்த
அழகிய ‘காதல் அஞ்சல்’
”அடைகஎன் வீட்டைக் காலை
ஐந்தரை மணிக்கு நீவீர்”
அஞ்சலைப் படித்தான் பாரி,
அற்றைநாள் இரவு தன்னைக்
கெஞ்சினான் திட்டிப் பார்த்தான்
கேட்கவே இல்லை அஃது;
மிஞ்சுகா லணிகள் பூண்ட
மெல்லிபோல் மெதுவாய்ச் செல்ல;
கொஞ்சிற்றுப் பரிதி கீழ்ப்பால்
கொடியிடை வீடு சென்றான்.
வருகஎன் றுரைத்தாள் — கண்ணால்
வரவேற்று நின்றாள்; பாரி
இருகையால் தழுவப் போனான்
‘இரும்’ என்றாள் ‘என்ன’ என்றான்?
ஒருமனப் பட்டு வாழ்க்கை
ஒப்பந்தம் செய்து கொள்வோம்
பருகுவோம் பிறகு காதற்
பழச்சாற்றை என்று சொன்னாள்.
உம்மதம் என்ன என்றாள்
உம்பெயர் என்ன என்றாள்
”எம்மதம் ஆனால் என்ன
யான்ஒரு முசீலீம் என்றான்.
செம்மைசேர் புனை பெயர்தான்
பாரிஎன் றுரைத்தான் செம்மல்.
”இம்மியும் நமது வாழ்வில்
ஒற்றுமை இராதே” என்றாள்.
என்மதம் மயிலே உன்னை
வரவேற்க மறுப்ப தில்லை.
கன்னலின் உதட்டை என்பால்
காட்டுக என்றான் காளை
நன்மனத் தீர்!உமக்கு
நான்வேண்டு மாயின், நீவிர்
உம்மதம் துறக்க வேண்டும்
உள்ளத்தும் வெளிப்புறத்தும்!
என்றனள் இதனைக் கேட்டான்.
திடுக்கிட்டான் இயம்பு கின்றான்.
என்மதம் இஸ்லாம், ஆம்ஆம்
எனினும்நான் திராவி டன்தான்
என்றனன். மங்கை நல்லாள்
இதுகேட்டாள் சிரித்துச் சொல்வாள்;
மன்னிய திராவிடடர்க்கு
மதமில்லை சாதி இல்லை!
தளைமதம் விடுக நீவிர்
தனிவிடு தலைமேற் கொள்க.
களையினை நெஞ்ச கத்துக்
கழனியில் வளர்த்தல் வேண்டாம்
இளமையின் பயனும் வாழ்வின்
இன்பமும் மதத்தில் இல்லை
விளைந்திட்ட தீமை எல்லாம்*
நினைவினில் ஆழ்ந்தான் நெஞ்சில்
நிறைஇருள் நீங்கப் பெற்றான்.
தனிப்பெருந் திராவி டத்தைத்
தான்எனக் கண்டான். மானே
இனிஒரு மதத்துக்கு ஆட்பட்டு
இரேன் என்றான். தூய்மை யான
மனத்தினை அவளுக் கீந்தான்
மங்கையும் தன்னைத் தந்தாள்.
என்னடி கானக் குறத்தி — எனக்
கின்பம் தராதிருக் கின்றாய் !
பொன்னடி நத்திய என்னை — ஒரு
போதும் விலக்கிட வேண்டாம்!
பின்னடி தோளோடு தோளை — பேச்சுப்
பேசவும் கூசுவ தேனோ?
கன்னல் உதட்டினைக் கொஞ்சம் — உண்ணக்
காட்டடி நீட்டாண்மைக் காரி!
முத்துச் சிரிப்புடை யாளே — மலர்
மொய்குழ லேஇள மானே !
தித்திக்கும் தேன்மொழி யாளே — எங்கும்
தேடக் கிடைக்காத பொன்னே
ஒத்துக்கொள் ஒத்துக்கொள் என்னை — இடை
ஓரத்தி லேஎன்னைச் சேர்ப்பாய்!
தொத்தும் பசுங்கிளி போலே — என்
தோளில்வந்தேறடி பெண்ணே!
கல்லைக் கவண்கொண் டெறிந்தாய் — கடைக்
கண்ணெறிந் தாயடி என்மேல் !
கொல்லையிற் புள்ளினை வாட்டி — எனைக்
கொன்றனை உன்மையல் ஊட்டி
அல்லல் அகற்றடி மானே — எதிர்
ஆடியும் பாடியும் காட்டி
இல்லைஎன்னாதுகொ டுப்பாய் — அடி
என்னிரு கன்னத்தில் முத்தம்!
Tamil quotes, Tamil recipes, Tamil celebrity quotes, Tamil Inspirational quotes, Tamil Motivational quotes
© 2021 Exploring New Everyday. All rights reserved.
Latest healthy and delicious recipes